×

இரட்டை பெண் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை: தம்பதியிடம் விசாரணை

சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்த தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது 45 வயதான மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. பின்னர், தம்பதி இருவரும் சேலத்திற்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால், நிறைமாத கர்ப்பிணியாக சென்ற அந்த பெண், குழந்தை எதுவும் இல்லாமல் தனது கணவனுடன் வந்ததால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, அந்த தொழிலாளி தம்பதியினர், தங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தையை, பெங்களூருவில் விற்பனை செய்து விட்டதாக, சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு ஒரு புகார் வந்தது. இதையடுத்து அந்த அமைப்பினர் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், சைல்டு லைன் நிர்வாகிகள் மற்றும் போலீசார், அன்னதானப்பட்டியில் உள்ள சம்மந்தப்பட்ட தொழிலாளி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், போலியான முகவரியை கொடுத்து, பிரசவத்திற்காக சேர்ந்தது தெரியவந்தது. மேலும், அங்கு அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும், ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், அந்த பெண் குழந்தைகளை வளர்க்க விரும்பாததால், அதனை ₹5 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெண் யாரிடம் தனது குழந்தைகளை விற்பனை செய்தார்? அல்லது அவரை யாரேனும் வாடகை தாயாக பயன்படுத்திக் கொண்டார்களா? என்பது குறித்து போலீசார் மற்றும் சைல்டு லைன் நிர்வாகிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரட்டை பெண் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை: தம்பதியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Annadhanapatti… ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...